Tuesday, March 22, 2011

அடையாளம் வாரம் - 7‏

தாமரைக்கண்ணன் வீடு:
வீறுகொண்டு எழுந்த இனம் இன்று இலவு வீட்டில் உட்காந்திருக்கிறது. இலவு விசாரிப்பதும், ஒப்பாரி பாட்டு பாடுவதும் நம் மரபு. எதிரியின் வீடாயினும் சாவு என்று வந்துவிட்டால், போகவேண்டும் என்பது எழுதபடாத சட்டம். தாமரைக்கண்ணன் முதல் கடைக்குடிமகன் வரை நாடே வந்திருந்து, மரியாதை செலுத்தியது. பள்ளிகூட ஆசிரியர் மரணத்தின் மூலம் மக்களின் பேராசியர் ஆனார். மக்களை மனதை வென்றார். புலிக்கொடியுடன் ஆட்டம், பாட்டம், கூத்து, கரகம், புலியாட்டம், ஒயிலாட்டம் என ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. தாமரைக்கன்னனின் மூத்தமகனார் இடங்கையில் மண்ணை புறம்தள்ள, தாமரைக்கண்ணனின் புனித உடல் அடக்கம் செய்யப்பட்டது.


சென்னை மாநகரம்:
திரைப்படமொன்றில் விறு விறு நடித்துத்கொண்டிருந்த உதயகுமாரின் கைபேசி சிணுங்கியது. வணக்கம் என்றான்., டில்லியிலிருந்து அழைப்பு. அடுத்த பத்து நிமிடங்களில் அழகிய விடுதிக்கு கூட்டிசெல்லப்பட்டான், அங்கிருந்தது விக்ரம் சிங். டில்லியிலிருந்து அனுப்பப்பட்ட கூடுதல் தலைமை செயலாளர். தமிழக நடவடிக்கைகளை கட்டுபடுத்த அனுப்பப்பட்டவர். நாங்க எல்லாத்தையும் பார்த்துகொள்கிறோம், நீங்கள் கட்சியின் தலைவராக முதலில் நியமிக்கபடுவீர்கள், கட்சியை உடைப்போம், உங்களுக்குப்பின் வருபவர்களை வைத்து அரசியல் செய்யனும். உங்களுக்கென்று ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்கள் நீங்கள் என்ன செய்தாலும் உங்கள் பின் வருவார்கள், உங்கள் பேச்சை கேட்பார்கள். தேர்தலில் நீங்கள் வெற்றிபெற்றால்... கொஞ்சம் யோசித்துபாருங்கள். இந்த வாய்ப்பை தவறவிட்டால்... மேலும் டில்லியை பகைத்துகொள்ளவேண்டாம். ஆனால், வெற்றிமாறனை பகைத்துக்கொள்வது    சிரமம்.... பாதுகாப்பு? என்றான் உதயகுமார். அதை இந்திய அரசு பார்த்துகொள்ளும்... உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்களுக்கும் உடனடியாக கூடுதல் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்படும். கவலைப்படவேண்டாம். ஈயென இழித்தான் உதயகுமார்.


உதயகுமாரை பற்றி சில வரிகள் சொல்லவேண்டும். இன்றைய நாட்களில் கூடுதல் வசூல் கொடுக்கும் நடிகன் இவர்தான். அம்மா மலையாளி, அப்பா மராட்டியர். மும்பையிலிருந்து பிழைக்க வந்த குடும்பம். ஆறடி உயரம், பளிசென்ற மேனியில் கொஞ்சம் வெண்ணை தடவினார்போன்ற நிறம், கொள்ளைகொள்ளும் கண்கள், நீண்ட புருவம், செதுக்கிய மீசை, பளீரென பேசும் பக்குவம்... மொத்தத்தில் நடிக்க சிறந்தவன், தெரிந்தவன். திரையில் தோன்றினாலே சத்தம் வின்னைபிளக்கும் ரசிகர்கள், உயிரையும் கொடுக்க தயாராக இருக்கும் கூட்டம். பணத்தை கொட்டி செலவழிக்க தயாராக இருக்கும் பணமுதலைகள்.


அன்றைய மாலை செய்திகளில் அழகிய சிரிப்புடன் கொட்டை செய்தியில் தோன்றினான். வெற்றிமாறனின் அதே கட்சிக்கு டில்லியிலிருந்து அறிவிக்கப்பட்ட தலைவனானான். முதல் பேட்டி கொடுத்தான். வணக்கம். என் இனிய தமிழ் மக்களே... உங்களை இந்த பதவியில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். என்னை வெறும் நடிகனாக மட்டுமே பார்த்திருந்த நீங்கள் தலைவனாக பார்க்கபோகிறீர்கள். பதவிக்காக தலைவர் பதவியில் இருக்காமல், உங்களுக்கு சேவகனாக இருக்கப்போகிறேன். அதற்காக, நான் உங்களை நேரில் சந்திக்க வருகிறேன். நாளை காலை என் மேலாளர் அட்டவணை வெளியிடுவார். அதன்படி தமிழகத்தின் பட்டி, தொட்டிகளிலெல்லாம் பேச இருக்கிறேன். நன்றாக ஆட்சி செய்துகொண்டிருந்த வெற்றிமாறன் எதனால் இப்படி ஒரு முடிவை எடுத்தார் என எல்லோருக்கும் பெரும் வியப்பாக இருக்கிறது. எனக்கு தெரிந்து ஏதோ ஒரு வெளிநாட்டு சதியாகவே இருக்கும் என நம்புகிறோம். எங்களுக்கு கிடைத்த உளவுத்துறையின் தகவலின் படி இது சீனாவின் திட்டமாகவே இருக்கும். மேலும், சுவிஸ் வங்கியில் சீனா பெரும்தொகை ஒன்றை மாறனின் பெயரிலும், அவர் மனைவியின் பெயரிலும் போடபட்டிருக்கிறது என்றும் அதன் நகல் இன்றோ நாளையோ நாங்கள் வெளியிடுவோம் என்றும் கூறினான்.


மேலும் பேசியதாவது, இந்தியா ஒரு மாபெரும் வல்லரசு. இதைவிட்டு மாறன் உங்களை திசை திருப்பி எங்கோ கூட்டிச் செல்கிறார் என்றும், இந்தியாவின் பலத்திற்கு முன் யாரும் ஒன்றும் செய்யமுடியாது என்றும் பேசினான். தனியாக சென்றால், தமிழகம் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகும் என்றும், பசியிலும், பட்டினியிலும் இருக்கவேண்டியிருக்கும் எனவும். முதலீடுகளுக்கு பணம் இல்லாமல் போவதால் வேலை இல்லா தின்டாட்டம் தலைவிரித்தாடும் என பொருளாதார நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள் எனவும் பேசினான். இன்னும் நான்கு மாதத்தில் பொது தேர்தல் அறிவிக்கப்படும், அதில் இந்தியாவின் சார்பாளர்களே வெல்வர், தனித்தமிழக கோரிக்கை மாறனின் தனிப்பட்ட கருத்து அதற்க்கு மக்களின் ஆதரவு என்றும் இருக்காது. எனவே தனித்தமிழக கூப்பாட்டிற்கு பின் செல்பவர்கள் சிறிது யோசித்துக்கொள்ளுங்கள்... நாளை இந்திய சார்பாளர்கள் வென்றபின் அவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்காது எனவும் எச்சரித்தான். இப்பொழுதே, அவர்கள் உளவுத்துறையால் ரகசியமாக கவனிக்கப்பட்டு, அடையாளம் காணப்பட்டு, பட்டியல் தயாரிப்பதாகவும்... அந்த பட்டியல் நபர்கள் நாளை களை எடுக்கப்படுவார்கள் எனவும் அச்சுறுத்தப்பட்டது. அரசுத்துறை, பொதுத்துறை நிறுவங்களில் வேலை செய்பவர்களின் வேலை போவது உறுதி, தனியார் நிறுவனங்களுக்கு அரசிடமிருந்து ஓலை அனுப்பபோவதாகவும், தனித்தமிழக ஆதரவு தொழிலாளர்களை நீக்க அரசு பரிந்துரைக்கும் எனவும், கடைபிடிக்காத நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.


முதல்கூட்டம் விருத்தாச்சலத்தில் என அறிவிக்கப்பட்டது. சுவரொட்டிகள், விண்ணைத்தொடும் படவெட்டுகள் என களைகட்டியது. இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் தருணத்தில் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். நாளைய முதல்வர், தேசபற்றுத்தங்கம், பாரதமாதா ஈன்றெடுத்த தவப்புதல்வன், இந்திய ஒற்றுமையின் இலக்கணம் என பாட்டங்கள் பல வாங்கினான். சாலைகள் வண்ணமயமாயின. இந்திய படையணியினர் களமிறங்கி வேலை செய்தனர். விசிலடித்தான் குஞ்சுகள் கர்ச்சித்தன. பாலபிசேகம், சிறப்பு வழிப்பாடு கோவில்களில் செய்யப்பட்டது.


நேராக உதயகுமார் வீட்டிலிருந்து உலங்குவிமானம் விருத்தாச்சலத்தில் இறங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. உலங்குவிமானத்தில் பதினைந்து பாதுகாப்பு காவலர்கள், அனைவரிடமும் அதிநவீன துப்பாக்கிகள். மின்னும் வெள்ளைவேட்டியில் பளீரென வந்தான் உதயகுமார். வீட்டுவாசலில் பாதுகாப்பிற்காக சுமார் ஆயிரம் படையினர். பட்டென பறந்து சென்றது உலங்குவிமானம். வானில் பறக்கும்போது விமானி விமானம் பழுது என பள்ளிளித்தான். உடனடியாக இறங்கவேண்டும் இல்லையென்றால் ஆபத்து என்றான், இன்னும் சில நிமிடங்களே பறக்கமுடியும் என்றான் விமானி. நண்பிக்கையில்லாத பாதுகாவலர்கள், கட்டுபாட்டு அறைக்கு தொடர்பு கொண்டார்கள். ஒன்னும் பழுதில்லையே, நல்ல விமானம் தானே கொடுத்தோம் என்றனர். ஐயா அது உங்கள் விருப்பம், நீங்கள் சொல்வது போல் கேட்கிறேன்., போ என்றால் போகிறேன். எனக்கு தானியங்கி காற்றுமிதப்பான் இருக்கிறது. உங்களுக்கும் இருக்கிறது... ஆனால் சரியான பயிற்சி இல்லாமல் பறப்பது கடினம். சீக்கிரம் சொல்லுங்கள் என்ன செய்வதென்று என கேட்டான் விமானி, ஐயா, அருகில் செங்கல்பட்டில் இறங்கலாம். சீக்கிரம் சொல்லுங்கள். அதன்படி செங்கல்பட்டு அரசினர் மேனிலைப்பள்ளி விளையாட்டுத்திடலில் உலங்குவிமானம் இறங்கியது. இன்னும் சரியாக ஒரு மணி நேரந்தான் இருக்கிறது, மேடையில் உதயகுமார் முழங்க. அவசர அவசரமாக அடுத்த உலங்கூர்தி ஏற்பாடு செய்யப்பட்டு, வந்து கொண்டிருந்தது. அது வர இன்னும் முப்பது நிமிடங்கள் பிடிக்கும், எனவே ஆசிரியரின் அறை கொடுக்கப்பட்டு அமரவைக்கப்பட்டான். உதயகுமார் வந்த உலங்கூர்தி பழுடைந்துவிட்டதால், அரைமணி நேரம் தாமதமாக கூட்டம் தொடங்கும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர் விருத்தாச்சலத்தில்.

ஐம்பது துப்பாக்கியினர் உதயகுமார் இருந்த அறைக்குள் புகுந்தனர், மின்னல் வேகத்தில் பதினைந்து படையினர் மற்றும் உதயகுமார் நெற்றியில்.....

No comments: