Saturday, March 19, 2011

அடையாளம் வாரம் - 6‏

தஞ்சை ஆட்சி நகரம்:
சட்டமன்றத்திற்கு முன் இருக்கும் ஆகப்பெரிய கொடித்திடல். குறைந்தது மூன்றே கால் லட்சம் மக்கள் குழுமியிருந்து பார்க்கும்படி வடிவைமைக்கப்பட்ட திறந்தவெளி திடல். காலை ஒன்பது மணி அளவில் வெற்றிமாறன் புலிக்கொடி ஏற்றுகிறார். பத்துபேர் மரத்தடியில் நின்றாலே ஒரே சல சலவென்று இருக்கும்.... மூன்றை லட்சம் மக்களும் மாறன் சொல்லும் வணக்கத்திற்காக மூச்சு கூட விடாமல் உட்கார்திருந்தார்கள். பேசினார்.... இன்று நாம் தனியாக இருக்கிறோம். இதுவரை எந்த நாடும் நம்மை அங்கீகரிக்கவில்லை..... இந்திய படைகள் சூழ்ந்துள்ளன. படைகளை கண்டு யாரும் அஞ்சவேண்டாம்...இந்திய படைகளின் ஒரே ஒரு தோட்டா கூட செலவழிக்காமல் நாம் அந்நிய நாடுகளால் அங்கீகரிக்கப்படுவோம். நம்பிக்கை கொள்ளுங்கள். இதுவரை நாம் நம் அடையாளங்களை இழந்து நூற்றைம்பது கோடியில் ஒருவராக வாழ்ந்தோம்... நம் செல்வங்கள் சுரண்டப்பட்டன... வஞ்சிக்கப்பட்டோம்... எள்ளி நகையாடப்பட்டோம்.... நம் எல்லைகளை மாற்றான் கொள்ளைகொண்டான்.... நம் சொந்தங்களை முள்வேலிக்குள் அடைக்கப்பட்டார்கள்.....  கட்ச தீவை யாருக்கோ தாரைவார்த்து கொடுத்தார்கள்... நன்றிக்கு மாறாக மீனவர்களை இழந்தோம்...விவசாயம் செய்ய வேண்டிய விழை நிலங்கள் எல்லாம் விலை நிலங்களாக மாற்றப்பட்டு மார்வாரிகளும், வடவர்களும், மாற்றான் மக்களும் அபகரித்தனர்....ஏன் தண்ணீர் இல்லை? எங்கே நம் நீர் உரிமை? ஆபத்தான அணு உலைகளும், தாமிர உருக்கு ஆலைகளும் நம் மண்ணில் கட்டினார்கள்.

இன்று நாம், நமது என்றிருக்கப்போகிறோம். இது தமிழ் மண். இது பதினைந்து கோடி தமிழன் எந்த நாட்டில், எந்த நாடுடைய குடியுரிமை பெற்றிருந்தாலும் அவர்களுக்கு இந்த மண் சொந்தம். இங்கே மாற்றான் நிலம் வாங்க முடியாது. ஆனால் குடியிருக்க அனுமதி உண்டு. யாரும் வாழலாம்... ஆனால் தமிழன் மட்டுமே ஆள்வான். உலகின் எந்த மூலையில் சென்றாலும் தமிழன் அடிபடுவான் என்பது நாம் தினந்தோறும் கேட்கும் செய்தி. இன்று முதல் ஏன் என்று கேட்க ஒரு அரசு, மாபெரும் தற்காப்பு படைகள் இருக்கிறது. நம் முதல் திட்டமாக அனைவருக்கும் அடையாள அட்டை மாற்றப்படும். புலிக்கொடி ஏந்திய அட்டையில் இனம் என்ற இடத்தில் "தமிழர்" என்றும் பிற இன மக்களுக்கு அவரவர் இனம் அச்சிடப்பற்றிருக்கும்.

இந்த அரசு "குலப்பாகுபாடு" (வடமொழியில் ஜாதி என்று சொல்வார்களே) பார்க்கும் அரசு அல்ல. அதேநேரத்தில், தன குலம் யாரென்று மழுங்கசெய்யும் அரசும் அல்ல. குலம் நமது அடையாளங்களில் அடிப்படையான ஒன்று. குலம் தெரியாத காரணத்தினால் யார் யாரோ தமிழில் பேசி நம் இனம் மொத்தத்தையும் அழித்துவிட்ட வரலாறு ஏராளம். அதற்க்கு எடுத்துக்காட்டுதான், சுமார் நானூற்றி ஐம்பது ஆண்டுகளாக இந்த மண் அயலானால் ஆளப்பட்டது. அதனாலேயே.. நம் இனம் சுவடு தெரியாமல் குட்டி தீவில் குழிபறிக்கப்பட்டது. நமக்கு அந்த நிலை வருமுன் நாமே நம் காலில் நின்றுவிடுவோம். நாமே நம்மை ஆட்சிகொள்வோம்.

உலகின் மூத்தமொழிகளுள் முதன்மையானது தமிழ். உலகிற்கு இலக்கணம் கற்றுகொடுதது தொல்காப்பியம். முதன் முதலில் ஆற்றின் குறுக்கே அணை கட்டி வாய்க்கால் பாசன முறை கற்றுகொடுத்தவன். கட்டுமரம் கட்டி கடுலகை எப்படி ஆளவேண்டும் என்று காட்டிக்கொடுத்தவன். ஆதிதமிழன் தான் முதலில் கடலில் பயணித்தவர்கள். வெறும் மாட்டுக்கறியை வெந்நீரில் அவித்து சாப்பிட்டுகொண்டிருக்கையில், சமையற்கலையை உலகிற்கு கற்றுகொடுத்தவன் தமிழன். உலகமே மரத்தில் வீடு கட்டியிருக்கையில், சுட்ட சுண்ணாம்பையும், கற்களையும் கலந்து (சிமிண்டில்) காரைவீடு கட்டி வாழ்ந்தவன். ஏன் தமிழன் உலகிருக்கு அருளிய பெருமைகள் எல்லாம் திட்டமிட்டு பாடத்திட்டத்தில் சேர்க்கப்படாமல் இருந்தன. உணவே மருந்து மருந்தே உணவு என பாட்டி வைத்தியம், கைவைத்தியம் கற்றுகொடுத்தவன். நட்சத்திரங்களையும், வானத்தையும், பாடும் பறவைகளின் ஒலியின் மூலம் வான் குறிபார்த்து கதைத்தவர்கள் முன்கூட்டியே. எங்கே நாம் மறந்தோம். இல்லை மறைக்கப்பட்டோம். இனி நாம் அடையாளங்களுடன், பெருமைகளுடன் வாழ்வோம்.

வெறும் அடையாளங்களுக்காகவும், பெருமைகளுக்காகவுமா நாம் வெளியேறினோம். ஆம். இன்னும் ஐநூறு ஆண்டுகள் கழித்து நாம் பிள்ளைகள் எப்படி பேசும். தமிழிலா... ஆங்கிலத்திலா... இந்தியிலா... நமக்கே தெரியாது. நாம் மொழி இழந்து நிற்ப்போம். இன்று எத்தனையோ நாடுகளில் வாழும் ஆதிகுடிகள் தங்கள் மொழி அடையாளத்தை இழந்து நிற்கிறார்கள். அவர்கள் யார் என்று தங்களை அறிமுகபடுத்திகொள்வார்கள். மொழியும், இனமும் மட்டுமே மனித அடையாளங்கள். இவைகள் இழக்கப்படும்போது அவர்கள் வெறும் விலங்கினங்களே என்றால் மிகை ஒன்றும் ஆகாது. அதனால் நாம் இந்த முடிவிற்கு வந்தோம்.


இப்பொழுதும் நாம் ஆயத்தமாக இருக்கிறோம். எங்கள் கொள்கைகளை விட்டுக்கொடுக்க. ஆனால், ஒரு கேள்வி. உங்களுடன் சேர்ந்து இருக்க ஒரே ஒரு சரியான காரணம் மட்டும் சொல்லுங்கள். என்ன சொல்லப்போகிறீர்கள். நாம் எல்லோரும் ஒருவர். நாமெல்லாம் இந்தியர்...என்றா? நங்கள் உரக்க சொல்கிறோம். நாங்கள் இந்தியர் அல்லர். நாங்கள் தமிழர். எல்லோரும் ஓரினம் என்றால்.... ஏன் இத்தனை நாடுகள்... இத்தனை போர்கள்... ஏன் சோவியத் உடைந்தது....மொழியும், இனமும் அல்லாத ஒரு காரணம் சொல்ல முடியுமா? ஏன் கொசோவா தனியா சென்றது? செக் என்றும் சுலோவாக்கியா என்றும் ஏன் பிரிந்தன? மொழி, இனம் என்பதல்லாது வேறு ஒரு காரணம் உண்டா? ஏன் கிழக்கு, மேற்கு ஜெர்மனி ஒன்றாக இணைந்தது..ஏன் யூதர்கள் ஓடினார்கள்..... இஸ்ரேல் ஏன் பிறந்தது? நாமெல்லாம் இந்துக்கள். ஒரே நாட்டில் வாழ்வோம். நன்று. அப்படியானால், வளைகுடா நாடுகள் என்ற ஒரே நாடுதான் இருந்திருக்கவேண்டும். ரோமன் கத்தோலிக்கம் என்று இன்னொரு நாடு இருந்திருக்கவேண்டும். இரண்டுமே இல்லை. ஏன்............... அது மனித இயல்பு அல்ல. மனித இயல்பு அவணன் மொழியினருடனும், இனத்தவரிடமும் சேர்ந்திருப்பது. மதத்தவரிடம் அல்ல. மனித இயல்பு தாண்டி நாம் மனமற்றம் செய்யப்பட்டிருக்கிறோம். அது 1947 ஆண்டு தொட்டு செய்யப்பட்ட மூளைச்சலவை. மனிதனாக வாழ மொழி, இனம்  மிக அவசியம். இனமும், மொழியும் வாழ தனிநாடு அதைவிட அவசியம்.

எனவே என் இனமே... என் இன மக்களே. உங்கள் ஆதரவும், நண்பிக்கையும் தான் நாம் இனத்தை அடுத்து வரும் நாம் சந்ததியினருக்கு அடையாளத்தை எடுத்துச்செல்லப்போகிறது. நீங்கள் துப்பாக்கி எடுத்து சண்டையிட வேண்டும் என நான் கோரவில்லை. அண்ணன் வேலுப்பிள்ளை பிராபகரன் சுட்ட சூடு இன்னும் பத்து தலைமுறைக்கு நம் நம்பிக்கையை உடனிருத்தும். அவரின் கோபவார்த்தைகள், ரத்தத்தினால் எழுதிய சுவடுகள் நாம் வீழ்ந்தாலும் நம் இனத்தை தூக்கிநிறுத்தி தனிநாடு வாங்கச்செய்யும். நான் இதுவரை கோடிட்டு காட்டிய வாசகங்கள் அண்ணன் பேசிய மிச்சங்கள். எனவே, நான் உங்களிடம் நான் கேட்பது உங்கள் ஒத்துழைப்பு. இந்திய படைகள் எந்த காவல் நிலையத்தையும், எந்த நிறுவனத்தையும், நாம் பாதுகாத்து வந்த கட்டமைப்பையும் கட்டுக்குள் கொண்டுவந்துகொள்ளட்டும். உங்கள் ஆதரவும், நண்பிக்கையும், ஒத்துழைப்பும் இருந்தால் இன்னும் மூன்றே மாதங்களில் அனைத்து நாடுகளும் தமிழகத்தை அங்கீகரிக்க செய்ய வைப்போம். அதுதான் எங்கள் குறிக்கோள்.

இத்துடன் என் உரையை முடித்துக்கொண்டு விடைபெறுகிறேன். மீண்டும் சந்திப்போம்.

வாழ்க தமிழகம்.
மூன்றை லட்சம் மக்கள் ஒரே குரலில் ஆர்ப்பரித்தனர். "வாழ்க தமிழகம்".

ஆர்ப்பரித்து அடங்குமுன் ஓர் தள்ளாத வயது பெரியவர். மயங்கி விழுந்தார். அங்கிருந்த ஒருவர் அடையாளம் கண்டு சொன்னார். அவர் தாமரைக்கண்ணன் என்று. அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இனி நான் செத்துவிட ஆயத்தமாகிவிட்டேன்...வாழ்க தமிழகம் என்றார்.. புலிக்கொடியை கீழே விட மறுத்தார்.... அரற்றினார். படுக்கையை விட்டு எழுந்து நின்று சத்தமிட்டார். ஒவென்று அழுதார்... கண்ணீர் மழ்க சத்தமிட்டு சிரித்தார். நான் வாழ்ந்தது போதும் கருப்பா... என்ன கூட்டிட்டுபோடா என்று கட்டளையிட்டார். இந்த நிலவரம் நன்றாக அறிந்த ஒரு வாலிபபென் அதை படமாக்கினாள். என்னை பலியிட்டு உங்கள் வாழ்வை தொடங்குங்கள் என்றார். சொல்லிக்கொண்டே.. சரேலென்று கத்தியை எடுத்து தன இடது கையின் மணிக்கட்டில் கீறி ரத்தம் வரவழைத்து வலது பெருவிரலில் தொட்டு பக்கத்தில் ஒரு சிறுவன் வெற்றிமாறனின் படத்தை வைத்திருந்தான், அதை பிடுங்கி படத்திற்கு வெற்றி திலகமிட்டார். இவை அனைத்தும் சொடுக்குபோடும் நேரத்தில் முடித்துவிட்டு மீண்டும் மயங்கினார். உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தது..ஆனால் அவர் முகம் மல்லிகையாய் மலர்ந்திருந்தது. மாறனை பார்க்காமல் உயிர் போகாது போலும்... வந்தார் மாறன். பெரியவரின் நெற்றியில் அழுத்தி முத்தமிட்டார். மிச்சமிருந்த குருதியில் மாறனுக்கு வெற்றிதிலகமிட்டார். போதுண்டா... மாறா... நா போறேன்.. நீ பாத்துக்கப்பா... பத்துகோடிப்பேர் டா... இன்னும் நெறைய தலைமுறைக வாழனுமைய்யா...பயபுள்ளைக... சினிமா பார்க்குற பய மக்க...வேற ஏதாவது செஞ்சு தொலக்குறதுக்குள்ள... ... வார்த்தை மங்கியது... தழுதழுத்தது..விம்மி புடைத்தார்.... மூச்சிழுத்தார்...புலிக்கொடியை மட்டும் விடவே இல்லை. உயிர் பிரிந்தது. மாறனின் கண்கள் குளமாகின. அழுதுவிடவா.. அடக்கிக்கொள்ளவா. முதன்முதலில் அழுதார்

நூற்றைம்பது ஆண்டுக்குமுன், முப்பது வயது முத்துகுமார் இறந்தபோது செய்யாத ஒரு மாற்றத்தையா இந்த வயதான சாவு செய்துவிடும். மாறன் ஏதும் அரசுபூர்வ மரணமென்று அறிவிக்கவில்லை. ஆனால், தமிழகம் வெகுண்டெழுந்தது மாபெரும் வரலாறு. இந்த மரணத்திற்கா இவ்வளவு ஓலம், இவ்வளவு  ஒப்பாரி. இது ஒப்பாரி இல்லை, ஓலம் இல்லை. இது ஒரு அறைக்கூவல், தமிழன் துயிழெலும் கொக்கரக்கோ. தூங்கிய தமிழர்கள் தெருவுக்கு வந்தனர். அனைவர் கையிலும் புலிக்கொடி, மாறனின் படம். தமிழனின் ஒருசொட்டு ரத்தத்திற்கு முன் எங்களுக்கு எதுவும் பெரிதல்ல.... அடிக்கடி கூறும் மாறன் பார்த்த முதல் குருதி. மக்கள் சபையில் அந்தப்பெண் எடுத்த ஒளிப்படம் மீண்டும் மீண்டும் காண்பிக்கப்பட்டது. தாமரைக்கண்ணன் எடுத்த கத்தியும், குருதியும் மக்கள் மனதில் பேரெழுச்சியை உண்டுபண்ணியது. பெருமதிப்பை பெற்றுத்தந்தது. ஆசிரியர் தாமரைக்கண்ணன் மரணம் அறிவிக்கப்படாத அரச மரணமாக அங்கீகரிக்கப்பட்டது. அவர் பூதஉடல் மக்கள் இறுதிமரியாதை செலுத்த வைக்கப்பட்டது. மக்கள் வெள்ளமாக வந்து மரியாதை செலுத்தினர். இந்தியா தன் விளையாட்டை ஆரம்பிக்கும் நேரம் வந்துவிட்டது. அவர்களுக்கு கிடைத்த கோடாரிகாம்பன் "உதயகுமார்".

தொடர்வோம்......

No comments: