Friday, May 20, 2011

பறை - 1

கூச்சமில்லாமல் நிறைய தமிழ் வார்த்தைகளை பேசுவோம்

சமீபத்தில் ""ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் படிக்க வேண்டிய செய்தி"" என்ற தலைப்பில் ஏயக் மொழியை பற்றியும், ஏயக் மொழியை கடைசியாக பேசிய பெண்மணி மேரி ஸ்மித் ஜோன்ஸ் என்றும் நீண்ட கட்டுரை பெரும்பான்மையானோர் படித்திருப்பிபீர்கள். படிக்காதவர்களுக்காக, கீழே இணைத்திருக்கிறேன்.

ஒரு மொழி உயிருடன் வாழ தேவையான சில அம்சங்களில் ஒன்று, குறைந்தது ஒரு லட்சம் பேராவது அம்மொழியை பேசவேண்டும் என்பது. ஆனால், நாம் எப்படி தமிழ் பேசுகிறோம் என்பது பற்றிய விரிவான வாதம் தேவையில்லை. நாம் நாமே நெஞ்சை தொட்டு விவாதித்திக்கொள்ளும் நிலையில்தான் நாம் இருக்கிறோம். இதில் சுட்டுவிரல் நீட்டி யாரையும் குறைகூறும் தகுதியை பெற்றுவிட, முயற்சிக்ககூட இல்லை என்பதுதான் கிட்டத்தட்ட உண்மை. ஒரு ஆங்கில வார்த்தை இல்லாமல் நம்மால் பேச இயலுமா என்பது கேலிக்குரிய கேள்விதான். நாம்தான் எழுத்து வடிவில் நல்ல நிலையில் தான் இருக்குறோம் என்று தோள் தட்டிக்கொள்வது, நாம் நம் கண்களை குத்துகொல்வதர்க்கு சமமானதே! எழுத்துவடிவம் ஒரு மொழியை வாழவைக்காது என்பது அதைவிட உண்மை. இன்றைக்கு இறந்தவிட்ட மொழிகளில் ஒன்றாக சமஸ்க்ருதம் இருப்பதற்கு காரணம் அம்மொழியை பேசுவதற்கு யாரும் இல்லை என்பதுதான். மொத்தம் 14,000 பேர்களே சமஸ்க்ருதம் பேசுவோர்கள் இருப்பதாக கணக்கெடுப்பு கூறுகிறது, அதுவும் சில மொழி ஆர்வலர்கள் இழுத்துபிடித்து படிக்கவைத்ததன் பொருட்டு, சிலர் பேசுவதாக கணக்கெடுப்பில் இருக்கிறது, உண்மையில் தாய்மொழியாக கொண்டு எவரும் பேசவில்லை என்பதுதான் உண்மை.  அதனால் மொழி எவ்வளவு வளமானதாக இருந்தபோதிலும் பேசுவதற்கு ஆட்கள் இல்லையென்றால், அம்மொழி இறந்துவிட்டதற்க்கு சமமே.

பிற மொழிகளின் பாதிப்பு:
கல்வி, பொருளாதார மேம்பாடு, வாழ்க்கைத்தரம் போன்ற சூழல்களும் மொழியை, அதன் வார்த்தைகளை பாதிக்கும் அம்சங்களில் ஒன்று. ஒரு தொலைபேசி எண்னை பிறருக்கு சொல்லும்போது பொதுவாகவே நாம் ஆங்கிலத்தில் சொல்வது படித்தவர், படியாதவர் என்ற பேதமில்லாமல் பாதித்த ஒன்று. சில சொற்களை தமிழில் சொல்வதை தரக்குறைவாக நினைப்பது மேலும் அந்த வார்த்தைகளை மறையச்செய்கிறது, எ.காட்டாக, ஒன்னுக்கு போய்விட்டுவருகிறேன், வெளியே போய்விட்டுவருகிறேன் என்பது சிறுநீர் கழிப்பதையும், மலம் இருந்துவிட்டுவருவதையும் இலைமறை காயாக கூறுவது இயல்பாக இருந்துவந்தது, ஆனால் இன்றைக்கு அசிங்கமாக பிள்ளைகள் நினைக்கும் அளவுக்கு போய்விட்டது. உச்சா, கக்கா வார்த்தைகள் கடனாக கிடைப்பதால், நாம் நம் சொத்தை இழந்துவருகிறோம்.

பேருந்து, மகிழுந்து, சரக்குந்து போன்ற வார்த்தைகள் இருந்தாலும், எழுத்துவடிவில் புழங்கினாலும், நாம் இன்னும் பயன்படுத்த ஆரம்பிக்கவே இல்லை என்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்று, மீறி நம்மை போன்ற உணவாளர்கள் பேசினால் சுற்றி உள்ளவர்களின் நகைப்புக்கு ஆளாகிறோம். அது நம்மை கொஞ்சம் முகம் சுளிக்கவைக்கிறது என்பதில் ஐயம் இல்லை. இங்கே என் கெட்டிகாரத்தனத்தை காண்பிக்கவேண்டும் என்பதற்காக இல்லாமல் எடுத்துகொண்டால், சில வார்த்தைகளை விளையாட்டாக பயன்படுத்தும்போது அது அப்படியே பழகிவிடுகிறது, அதனால் நகைப்பும், முகம் சுளிப்பும் இல்லாமல் சில வார்த்தைகள் வழக்கமாகிவிடுகிறது, எ.காட்டாக, வேலை இடங்களில் கணினி, பதிவுக்குச்சி, மேலாளர் போன்ற வார்த்தைகள் இன்றைய நண்பர்கள் அழகாக பயன்படுத்துகிறார்கள் என்றால் பெரும்பான்மையானவர்கள் நம்பமாட்டார்கள். ஒருவர் இரண்டு பேர் என ஆரம்பித்து காலப்போக்கில் அதுவே அழகான வழக்கு மொழியாக மாறும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. எனவே, அதற்க்கான சூழலை நம் போன்ற மொழி, இன ஆர்வலர்களே ஏற்படுத்தவேண்டும். யாரும் தமிழ் வார்த்தைகளை பயன்படுத்தும்போது ஏளனம் செய்யாமல் இருந்தாலே நாம் பாதிக்கிணறு தாண்டிவிட்டதாக எடுத்துகொள்ளலாம். அதுதான் சூழலை உருவாக்கவேண்டும் என்பதை சுருக்கமாக சொன்னால்.

எனவே, ஏயக் மொழியை போல் நாமும் அழிந்துவிடாமல் இருக்கவேண்டுமென்றால் ஒரே வழி கூச்சமில்லாமல் நிறைய வார்த்தைகளை பேசுவோம்., பேசுவோர்களை உற்சாகப்படுத்துவோம்.

No comments: